மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.
இந்தப் பொருட்களை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வாகனங்களில் அனுப்பிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,
“எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை.
கோவிட் காலத்தில் கூட என் வீட்டை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக கொடுக்க முன்வந்தேன். ஆனால் இது கரோனா தொற்று பாதித்த வீடு என்று ஒட்டிச் சென்றுவிட்டார்கள்.
எனவே இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல. இந்தப் பேரிடர் காலகட்டத்தில் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு உதவ வேண்டும். அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம். அது செய்யவேண்டிய ஒரு விஷயம்.
வல்லுநர்களுடன் அமர்ந்து இதுபோன்ற பேரிடர்களிலிருந்து தற்காத்து கொள்வதற்கான தீர்வுகளை நாம் ஆராய வேண்டும். இது காலநிலை மாறுபாடு என்று உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வு.
எனவே குறை சொல்லும் படலத்தை பிற்பாடு வைத்துக் கொண்டு மக்களுக்கு உடனே செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.