தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (04-12-2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதன்போது பொலிஸார் ஹயஸ் ரக வேன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் வேனின் ரயர் பகுதி சேதமடைந்த போதும் வன்முறை கும்பல் சுன்னாகம் ஊடாக தப்பிச் சென்றது
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.
காயமடைந்தவர்களின் வாக்குமூலம், சிசிரிவி காணொளி என்பவற்றை கொண்டு பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் ஒருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக யாழ். பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் வன்முறைக்கு பயன்படுத்தபட்ட ஹயஸ் ரக வேன், இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி, ரீசேட், ஹயஸ் வேனை உருமாற்றம் செய்யும் வகையில் வேனில் இருந்து உரிக்கப்பட்ட ஸ்ரிக்கர் என்பனவும் கைப்பற்றப்பட்டது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஹயஸ் ரக வேன் கைப்பற்றப்பட்டது.
கோப்பாய் – கைதடி இடையில் உள்ள மயானமொன்றில் மறைக்கப்பட்ட நிலையில் இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி , ரீசேட் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டு தரப்பினரிடையே நீண்டகாலமாக இருந்த பழிவாங்கும் எண்ணத்தின் அடிப்படையில் கொலை செய்வதற்கான முயற்சியே குறித்த வன்முறைச் சம்பவத்திற்கு பிரதான காரணம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நால்வரும் எதிர்வரும் 19ம் திகதி வரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மூவரும் தலைமறைவாகி உள்ளதாகவும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.