இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள ஏழு அறை கொண்ட ஹோட்டல் ஒன்று, உலகிலேயே மிகவும் “ஒல்லியான” ஹோட்டல் என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.
மத்திய ஜாவா பகுதியில் அமைந்துள்ள சாலாடிகாவில் உள்ளது இந்த ஹோட்டல். கட்டிடக்கலை வடிவமைப்பாளரான ஆரி இந்திரா என்பவர் இந்த ஹோட்டலலை கட்டியுள்ளார்.
அவரது சொந்தமான அந்த இடத்தில் வீடு கூட கட்ட முடியாது என்ற நிலையில், மிகவும் சாதூர்யமாக அவ்வுளவு சிறிய இடத்திலும் ஐந்து மாடி ஹோட்டலை கட்டிவிட்டார்.
இந்த ஹோட்டலில் உள்ள ஒவ்வொரு தனித்துவமான அறையும் வெறும் 2.8 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டது.
இந்த ஹோட்டல் மெர்பாபு மலை அடிவாரத்தில் உள்ளது. சுற்றுலாத் தளமான இங்கு வருகை தரும் விருந்தினர்கள், ஹோட்டல் அறையில் இருந்தபடியே கம்பீரமான மலைகளை பார்க்க முடியும்.
விலை குறைவாக இருந்தாலும் வசதியில் எந்த குறையும் இல்லாத இந்த ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும் இரட்டை படுக்கை, ஷவரோடு கூடிய சிறிய பாத்ரூம் மற்றும் டாய்லெட் வசதி உள்ளது.
சிறிய அறையாக இருந்தலும் ஒவ்வொரு அறையும் உள்ளூர் கலைப்படைப்புகளோடு, இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ஹோட்டலின் மேல் மாடியில் பாரும் உணவகமும் உள்ளது.
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டலில் தங்கும் 95 சதவீதமானவர்கள் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்களே.
உண்மையிலேயே இங்கு தங்கும் விருந்தினர்கள் அறையின் அளவைப் பார்த்து ஆசர்யமடைவதோடு, இவ்வளவு சிறிய அறையில் சந்தோஷமாக தங்க முடிவதை மகிழ்ச்சியாகவே உணர்வதாக தெரிவிக்கின்றனர்.