நுண் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக 30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றையதினம்(06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நுண்கடன் நிதி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றன.

நுண்கடன்களை முன்னிலைப்படுத்திய தற்கொலைகள், முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமூக கட்டமைப்பில் காணப்படுகின்றன.

நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளினால் சுமார் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தான் முறையற்ற வகையில் செயற்படுகின்றன. நிதி நிறுவனங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

பதிவு செய்யாத நிறுவனங்கள் 05 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருடகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

நுண்கடன் நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும்.

இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor