இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக இடைக்கால குழு ஒன்றை நியமிப்பதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த இடைக்காலச் சபை நியமிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால சபை
இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த இடைக்கால சபை நியமிக்கப்பட்டுள்ளது.
1973ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் ஊடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க கடமையாற்ற உள்ளார்.
மேலும் எஸ் ஐ இமாம், ரோஹினி மாறசிங்க, அயிரங்கணி பெரேரா ஆகிய ஓய்வு பெற்ற நீதிபதிகள், உபாலி தர்மதாசா, ஹிஷாம் ஜமால்டின் மற்றும் சட்டத்தரணி ராகிதா ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.
தெரிவிக்குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளார்.