இஸ்ரேலுக்கு 14.3 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்கான திட்டம் ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் இது நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று செனட் சபையின் ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டிருப்பதோடு இதனை நிராகரிக்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பிரதிநிதிகள் அவையில் 226–196 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு குடியரசுக் கட்சியினர் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
முதலாவது பிரதான சட்டமூலம்
குடியரசுக் கட்சியின் புதிய சபாநாயகர் மைக் ஜோன்சனின் கீழ் கொண்டுவரப்பட்ட முதலாவது பிரதான சட்டமூலமாக இது உள்ளது.
எனினும் இஸ்ரேல், தாய்வான் மற்றும் உக்ரைன் உட்பட நாடுகளுக்கு நிதியளிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக 106 பில்லியன் டொலர் அவசரத் திட்டத்தையே ஜனாதிபதி ஜோ பைடன் கோரியிருந்தார்.
எனினும் குடியரசு கட்சியினர் இஸ்ரேலுக்கு உதவுவதில் முன்னுரிமை அளித்துள்ளனர். இந்த 14.3 பில்லியன் டொலர் நிதித் திட்டத்தில் இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் குறுகியதூர ரொக்கெட் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அமைப்புக்கு 4 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.