ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த போட்டி மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆட்டத்தின் பாதியில் 230 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களுடைய பழைய கதையே தொடர்கிறது. இந்திய அணி பந்து வீசும் போது பனிப்பொழுது வந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய உள்ளுணர்வு இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சேசிங் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன்.
இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச்சு நாங்கள் சிறப்பாகவே செயல்படுகிறோம். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை நாங்கள் கொடுக்கின்றோம். விக்கெட்டுகளையும் எடுக்கின்றோம் 230 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருந்தேன்.
நான் மற்ற வீரர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயற்சி செய்தேன். இதன் மூலம் இந்தியாவின் உத்வேகத்தை குலைக்க முடிவு செய்திருந்தேன். எங்களுக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. அதுதான் எங்களுடைய பிரச்சனையாக இருக்கிறது.
230 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது எந்த நெருக்கடியும் வீரர்களுக்கு கிடையாது. ஆனால் எங்களுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. எங்கள் அணியின் தலைசிறந்த வீரர்கள் எல்லாம் அவர்களுடைய சிறந்த செயல்பாட்டில் வெளிப்படுத்தவில்லை.
அவர்களுடைய பெஸ்ட் க்கு அருகில் கூட இல்லை. பவர் பிளேவில் நாங்கள் நன்றாக தான் தொடங்கினோம். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர். நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இனிவரும் ஆட்டங்களை வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம் என்று பட்லர் கூறியுள்ளார்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், சூழல் இந்திய அணிக்கு சாதகமாக இல்லாத போது அனைத்து அனுபவ வீரர்களும் சரியான நேரத்தில் முன் நிற்கிறார்கள். முதல் 5 ஆட்டங்களில் நாங்கள் சேஸிங் செய்து வெற்றிபெற்றோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ளோம். நிச்சயம் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. எங்களுக்கு சவாலாக அமைந்தது. ஆனால் எங்களை பொறுத்தவரை, இந்த பிட்சில் சவால் அளிக்க தேவையான ஒரு ஸ்கோரை சேர்க்க வேண்டும் என்பது தான் திட்டமாக இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் எங்களின் பேட்டிங் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை. ஏனென்றால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது சாதாரண சூழல் இல்லை. அதுபோன்ற சூழல்களில், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதனை எங்களால் அமைக்க முடிந்தாலும், சரியாக முடிக்க முடியவில்லை. நான் உட்பட சில வீரர்கள் சொதப்பிவிட்டோம். எனது பேட்டிங் பொறுத்தவரை எனது ஷாட்டிற்கு ஏற்ற பகுதிகளில் பிட்ச் செய்தால், நிச்சயம் வாய்ப்பை பயன்படுத்துவேன். அப்படிதான் எதிரணி பவுலர்கள் மீது அழுத்தம் கொடுக்க முடியும்.
இன்றைய ஆட்டத்தில் கிட்டத்தட்ட 30 ரன்கள் குறைவாக தான் சேர்த்திருக்கிறோம். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு அசாதாரணமாக இருந்தது. இப்படியொரு பந்துவீச்சை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியாது.
இன்றைய இன்னிங்ஸில் பவுலிங்கை தொடங்கிய போது, 2 விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருப்பதால், நிச்சயம் அவர்கள் மீது பந்தையம் கட்டலாம். இன்றும் எங்கள் பவுலர்கள் பந்தயம் அடித்துள்ளார்கள். சூழலுக்கு தகுந்தவாறு பவுலிங் செய்து மிரட்டிவிட்டனர்.
இந்த பிட்சில் ஸ்விங்கும் இருந்தது. பிற்பாதியில் ஸ்பின்னும் இருந்தது. எந்த இடத்தில் பிட்ச் செய்தால் பேட்ஸ்மேன்களுக்கு சந்தேகம் வருமோ, சரியாக அந்த இடத்தில் பிட்ச் செய்தார்கள். உலகக்கோப்பை தொடரின் சிறந்த பவுலிங் அட்டாக் இந்திய அணியில் உள்ளது என்று சொல்ல முடியும்.
ஏனென்றால் 2 சிறந்த ஸ்பின்னர்கள், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதேபோல் கூடுதலாக அவர்களுக்கு இணையான வீரர்களும் பெஞ்சில் இருக்கிறார்கள். ஆனால் போதுமான இலக்கை எட்டிய பின், பந்தை பவுலர்களிடம் கொடுத்தால், நிச்சயம் அவர்களால் மேஜிக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.