ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். திருப்பதி அடிவார பகுதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் அளிப்பிரி வழியில் அவ்வப்போது சிறுத்தை, கரடி நடமாட்டம் இருந்து வந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடமாடிய சிறுத்தை ஒரு சிறுவனை தூக்கிச் சென்றன. பின்னர், அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்பியதால் சிறுவனை சற்று தொலைவில் விட்டுச் சென்றது. இதில், தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். மேலும், சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவரும் உயிரிழந்தார்.
இதையடுத்து, திருப்பதி மலைப் பகுதிகளில் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டுகள் வைத்தனர். அந்த கூண்டுகளில் அடுத்தடுத்து ஆறு சிறுத்தைகள் சிக்கின. பின்னர், அளிப்பிரி நடைபாதையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் குறைந்தது. இதனால், பக்தர்கள் அச்சமின்றி மலைப் பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே சிறுத்தை, கரடி ஆகியவற்றின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ட்ராப் கேமராக்களில் சிறுத்தை, கரடி நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இதனால், திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பக்தர்கள் குழுக்களாக பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.