யாழில் இருந்து சர்வதேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியமை மூலம் இலங்கை நீதி இல்லாத நாடு என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்றையதினம் (04.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு நீதி பொறிமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஜெனிவாவிற்கும் உள்நாட்டு நீதி பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை என்றே கூறி வருகின்றோம்.

முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியமையானது, உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என நாம் சர்வதேசத்திடம் கூறிவந்தமைக்கு தக்க சான்றாகும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மை சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதியென வழங்கப்பட்டு வருவது இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல.

இதன் வளர்ச்சியாக நீதியை பாதுகாக்கின்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை மாற்றுமாறு கோரி அச்சுறுத்தல் விடுவதும் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவதும் தமிழர் பகுதியான முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு அரங்கேறியுள்ளது.

அச்சுறுத்தல்
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனிதப் புதைகுழி விவகாரம் ஆகியவற்றில் நீதியின் பால் நடந்து கொண்ட நீதிபதி சரவணராஜாவை சிங்கள ஆட்சி பீடம் அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

நீதிபதிக்கு நியாயம் கேட்டு வடக்கு, கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் சர்வதேசம் இதனை கருத்தில் எடுக்க வேண்டும்.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சர்வதேசத்திற்கு உண்மை நிலையை எடுத்துக்காட்டியுள்ளதுடன் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேட்கும் சர்வதேச விசாரணையை சர்வதேசம் இனியாவது சிந்திக்க வேண்டும்.

ஆகவே இலங்கையின் நீதித்துறை வலுவிழந்துள்ள நிலையில் இனியும் சர்வதேசம் மௌனம் காக்காமல் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor