தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மை யினர் அடக்குகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கக்கோரி நேற்று யாழ். மருதனார் மடத்தில் இருந்து யாழ். நகர் வரை நடைபெற்ற மனிதச் சங்கிலிப்போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
நீதிபதிகளின் தீர்ப்புக்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் அதனை மேல் நீதி மன்றத்திற்கு கொண்டுவரலாம். அதனை விடுத்து தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தல் செய்வது அது நீதித்துறைக்கும் ஆகாது நாட்டின் வருங்காலத்தினை பாதிக்கும்.
சிறுபான்மையின நீதிபதியினை இவ்வாறு அச்சுறுத்துவது சிறுபான்மையின சம்பந்தமான உண்மையான சரியான தீர்ப்புக்களை கொடுக்க முடியாமல் போய்விடும். தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும்.
இவ்வாறு அச்சுறுத்துவது பெரும்பான்மையினரின் அடக்குமுறையினை காட்டுகின்றது. அரசாங்கம் இதனை உரியவகையில் தடுத்து நிறுத்த வேண்டும் – என்றார்