கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்தியது இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை வீரர் நிஷாங்கா மற்றும் கருணரத்னே நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்தனர் கருணரத்னே 32 ரன்களில் வெளியேற நிஷாங்கா 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
சமர விக்ரமா 3 ரன்களில் ஆட்டம் இழக்க நான்காவது விக்கெட்டுக்கு குஷல் மெண்டிஸ் மற்றும் அசலாங்கா ஜோடி சேர்ந்து இலங்கை அணி இன்னிங்சை கட்டமைத்தனர். அசலங்கா 36 ரன்களும், தனஞ்செய் சில்வா 14 ரன்களிலும் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய குஷல் மெண்டிஸ் 84 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகினார்.
இதில் ஆறு பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அடங்கும். இறுதியில் துணித் வெல்லகல்லே மற்றும் மகிஷ் தீக்சனா முறையே 33 மற்றும் 28 ரன்கள் எடுக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 291 ரன்களில் 8 விக்கெட்டுகள் இழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் குலாப்தீன் நயிப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த இலக்கை 37.1 ஓவரில் கடந்து விட வேண்டும் என இலக்கு இருந்தது.
இதனால் அதிரடியாக விளையாட முற்பட்ட தொடக்க வீரர் குர்பாஷ் 4 ரன்களிலும் இப்ராஹிம் 7 ரன்களிலும் குலாப்தீன் 22 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
நடு வரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
ரஹ்மத் 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேற கேப்டன் ஹஸ்மதுல்லா 59 ரன்கள் எடுத்து முக்கிய கட்டத்தில் வெளியேறினார். சூப்பர் போர் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் அணி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட்டது. குறிப்பாக முஹம்மது நபி 32 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.
இதில் ஆறு பவுண்டர்களும் 5 சிக்சர்களும் அடங்கும். முகமது நபி ஆட்டம் இழந்தவுடன் ஆப்கானிஸ்தான் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் மங்கியது. எனினும் கரீம் ஜன்னத்,நஜிபுல்லா, ரஷித் கான் ஆகியோர் தொடர்ந்து அதிரடியை காட்டியதால் ஆப்கானிஸ்தான அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்லும் தருவாயில் இருந்தது.
எனினும் கடைசி கட்டத்தில் தனஞ்செய்ய டி சில்வா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட் இழந்தது. இதன் மூலம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெற்றது.