விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர்.
நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு.
இலுப்பை எண்ணெய்
இறைவனுக்கு எத்தனையோ விதமான பொருட்களால் பூஜை, அபிஷேக, ஆராதனைகள் செய்கிறோம். அன்புடனும், பக்தியுடனும் செய்யும் அத்தனையையும் இறைவன் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சில பொருட்கள் மட்டும் அதிகசக்தி வாய்ந்ததாகவும், சில தெய்வங்களுக்கும் மிகவும் பிரியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
விளக்கேற்றுவதற்கும் பலவிதமான எண்ணெய்கள், பல கூட்டு எண்ணெய் ஆகியன பயன்படுத்தப்பட்டாலும் இவற்றில் மற்ற எண்ணெய்களை விட இலுப்பை எண்ணெய்யே விளக்கேற்ற மிகவும் சிறந்தது என சொல்லப்படுகிறது. இலுப்பை எண்ணெய்யானது இலுப்பை மரத்தின் வித்துக்களின் இருந்து பெறப்படுகிறது.
இலுப்பை எண்ணெய்யின் சிறப்புகள்
மருத்துவ ரீதியாக இந்த எண்ணெய் பூச்சிக்கடி, விஷக்கடி, கடும் இடுப்பு பலி ஆகியவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும். இந்த எண்ணெய்யை லேசாக சூடேற்றி தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும். ஆன்மிக ரீதியாக பார்த்தால் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் எண்ணெய்யாக இலுப்பை எண்ணெய் உள்ளது.
இலுப்பை எண்ணெய் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அனைத்து தெய்வங்களுக்கும் விளக்கேற்ற உகந்த எண்ணெய்யாகும். சிவனுக்கு மிகவும் பிரியமான எண்ணெய் இலுப்பை எண்ணெய் என்று கூறப்படுகிறது.
வீடுகளில் இலுப்பை எண்ணெய் தீபம்
கோவில்களில் விளக்கேற்றும் போது இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. இந்த எண்ணெய்யால் விளக்கேற்றி எந்த தெய்வத்தை வழிபட்டாலும், என்ன நினைத்து வழிபடுகிறோமோ அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது ஆன்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
வீடுகளில் இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றும் போது பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04.30 மணி துவங்கி 6 மணி வரையிலான நேரத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலனை தரும். அந்த நேரம் தான் இறைவனும், இறைவியும் நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
அந்த நேரத்தில் இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றினால் வேண்டுதல் அப்படியே நிறைவேறும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்ற சரியான நேரமும், பலன்களும்
பிரம்ம முகூர்த்த வேளையில் வெள்ளை நிற திரியிட்டு, இலுப்பை எண்ணெய்யை கொண்டு பஞ்ச முகங்கள் கொண்ட குத்து விளக்கேற்றுவது உயர்வானது. மாலையில் இந்த விளக்கை ஏற்றலாம்.
அதிலும் மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் இலுப்பை எண்ணெய்யில் தொடர்ந்து விளக்கேற்றி வந்தால் அஷ்ட லக்ஷ்மிகளின் அருளும், ஐஸ்வர்யமும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
மஞ்சள் நிற திரியிட்டு தீபம் ஏற்றி வந்தால் குபேர அருளும், திருமணம், குழந்தை பேறு போன்ற பாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மங்களங்கள் பெருகும்
வெள்ளை பஞ்சு திரியில் மஞ்சளை தேய்த்து, உலற வைத்து மஞ்சள் திரியாகவும் ஏற்றலாம். சிவப்பு நிற திரியால் விளக்கேற்றினால் வறுமை, கடன், பல விதமான தோஷங்கள் நீங்கும். பொதுவாக விளக்குகளை நெய் கொண்டு ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பார்கள்.
ஆனால் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவதன் பலனை ஒரே ஒரு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடும் போது பெற்று விடலாம். இலுப்பை எண்ணெய்க்கு அந்த அளவிற்கு தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.