கிளிநொச்சி-பளை வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மழையில் நனைந்தமையால் காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு நோய்க்காக வைத்தியசாலை சென்ற குறித்த பெண் இன்று பல நோய்களில் அவதியுறுவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நான் கடந்த மாதம் மழையில் நனைந்ததால், காய்ச்சல், சளியில் பாதிக்கப்பட்டேன். இதனால் என்னால் சரியாக மூச்சு விட முடியவில்லை. நான் சாப்பாடு கடை ஒன்றை நடத்தி வருவதுடன் சுமார் 50 பேரிற்கு சமைத்து கொடுத்து வருகின்றேன்.
எனவே சளி, இருமலுடன் வேலை செய்ய முடியாது. இதனால் பளை வைத்தியசாலைக்கு சென்று காய்ச்சலுக்கு மருந்து எடுத்தேன். அவர்கள் ஒரு மாத்திரை கொடுத்தார்கள். அதை 5 நாள் குடித்தேன். பின்னர் எனக்கு சாதாரண சளி, இருமல் வெகுவாக அதிகரித்து, காய்ச்சல் வந்தது.
இதனால் எனக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நான் பளை வைத்தியசாலைக்கு மீண்டும் சென்ற போது, நானே கூறினேன் மருந்து குடித்த பிறகு எனக்கு மிகவும் உடல்நிலை மோசமாகிவிட்டது என பின்னர் அவர்கள் நான் குடித்த மருந்து தேவையில்லை என குப்பையில் வீசிவிட்டு வேறு மருந்து தந்தார்கள்.
ஆனால் நான் அச்சத்தில் அந்த மருந்தை குடிக்கவில்லை. பின்னர் எனக்கு உடம்பில் வருத்தம் அதிகரிக்க யாழ்.வைத்தியசாலைக்கு சென்ற போது எனக்கான நோய் நிர்ணய அட்டையை அவர்கள் கேட்டார்கள்.
அதை நான் பளை வைத்தியசாலையில் கேட்ட போது. அதை எழுதி தருவதற்கு தாதியர் இல்லை என தெரிவித்தனர். பின்னர் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டேன்.
எனது பிள்ளைகளை தனியாக விட்டு சென்றேன். எனக்கு 3 பிள்ளைகள். இதுதான் நோய் காரணமாக நான் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட முதல் சந்தர்ப்பம். எனக்கு எந்த நோயும் இருக்கவில்லை.
இப்போது மூட்டு வாதம், புற்றுநோய் பரிசோதனை, உளநல சோதனை என பல சோதனைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எனது உறவினரை அனுப்பி நான் மறுபடியும் நோய் நிர்ணய அட்டையை கேட்ட போது அவர்கள் தரவில்லை.
இப்போது நானே நேரில் வந்து மறுபடி கேட்கும் போது யாழ்.வைத்தியசாலைக்கு தொலைபேசியில் கதைப்பதாக கூறினார்கள். பின்னர் எனக்கு வழங்கப்படாத மருந்துகளை நோய் நிர்ணய அட்டையில் எழுதி கொடுத்தார்கள்.
இதனை அவதானித்து, அந்த நோய் நிர்ணய அட்டையை ஏற்க முடியாது என கூறினேன். இவ்வாறு நான் கேட்டதற்கு, பிரச்சினை செய்வதாக கூறி,பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனால் தான் நான் ஊடகத்தை நாடினேன்.” என கூறியுள்ளார்.