சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் அடாவடித்தனம் ஆகிய செயலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஊடகத்தினை “சட்டரீதியற்ற மதக்குழு” ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி பகுதியில் அரச காணியில் அமைந்திருந்த நெசவாலை கட்டிடமொன்றில் பலவந்தமாக ஈ.பி.டி.பி கட்சியின் அனுசரணையில் ஆக்கிரமித்து மதமாற்றப்பணியில் ஈடுபட்டு வருகின்றதாக அப்பகுதி மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற மதக்குழுவானது அதி சத்தத்துடன் “சத்தமாசுபடுத்தல்” Voice Pollution என பொலிஸில் முறைப்பாடளித்த அயலிலுள்ள பெண்களைத் தாக்கி அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலைமையாக செய்தியாக வெளியிட்ட “உதயன்” பத்திரிகை நிறுவனத்தை அச்சுறுத்தும் விதமாக சொகுசுபஸ் மற்றும் பட்டா வாகனத்தில் வந்த போதகர் தலைமையிலான 30 பேர் கொண்ட அராஜக காவாலிக்கும்பல் செயற்பட்டுள்ளனர் என்பதோடு அச்சுறுத்தும் பாணியிலும் செயற்பட்டுள்ளனர்.
இது ஊடகச் சுதந்திரம் மற்றும் பொதுமக்களிற்கான சமூகம் சார் விடயங்களை சுயாதீன செய்தி அறிக்கையிடும் பத்திரிகை பணியை கேள்விக்குட்படுத்தும் ஓர் அராஜக செயலாகும்.
தாம் செய்தது பிழையான விடயம் என தெரிந்தும் அதை செய்தி ஆக்கி மக்களுக்கு வெளிப்படுத்தியதை அதில் தவறு இருப்பின் சட்ட ரீதியாக அணுகுவதை விடுத்து அராஜக முறையில் அச்சுறுத்தும் பாணியில் அணுகியமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
உண்மை செய்திகளை அறிக்கையிடுவதில் ஆயுததாரிகளின் நேரடி தாக்குதலுக்கே அஞ்சாது உண்மைகளை துணிவுடன் உரைத்த உதயன், அந்த பழைய ஆயுததாரிகளின் மறைமுக கர ஆதரவுடன் மத பேதங்களின்றி ஒற்றுமையாக வாழும் தமிழ் மக்களிடையே பிளவை உண்டாக்கும் வண்ணம் மதத்தை வியாபார பாணியில் பரப்பிட எத்தணிக்கும் இவர்களின் அராஜக அச்சுறுத்தல்களிற்கா அஞ்சப்போகிறான்?
என தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.