பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தீவிரமான வெப்ப அலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தீ பரவல் தொடர்பான அதியுச்ச எச்சரிக்கை
இதற்கமைய,வார இறுதி நாட்களில் தீ பரவல் தொடர்பான தீவிரத்தன்மை குறித்து அதியுச்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல இடங்களில் தீப் பரவல் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலையானது உடல்நலம், போக்குவரத்து மற்றும் பணி நிலைமைகளை பாதிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் முதல் முறையாக பிரித்தானியாவில் சூழல் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ் என்ற சாதனை மட்டத்தை எட்டியிருந்தது.
வெப்ப நிலையின் சாதனை மட்டம்
இவ்வார இறுதியில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை விட அதிகரிக்காது என்ற போதிலும் சில உள்ளூர் அல்லது பிராந்திய மட்டங்களில் வெப்பநிலையானது சாதனை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மாதம் இருந்ததை போன்று அதி உயர்ந்த வெப்பநிலை பதிவாகாத போதிலும் இம்முறை வெப்ப அலையானது மிகவும் நீடித்த ஒன்றாக உள்ளதாக வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாரத்தின் கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாளாந்த சூழல் வெப்பநிலையானது 30 பாகை செல்சியஸ்சிற்கும் அதிகமாக பதிவாகியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.