எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே இன்று மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.
இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன் விளையாட்டினையும் சேர்த்து கட்டியெழுப்புவதன் ஊடாகவே மாணவர்கள் மத்தியில் மனவலிமையை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கiலையரசன் தெரிவித்தார்.
இன்று காரைதீவு இராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சமூகம் மிளிர வேண்டுமானால் அதற்கு அடிப்படையாக இருப்பது கல்வி. அந்தக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்கான நிகழ்வுகள் இன்று இந்தக் காரைதீவு இராமகிருஸ்ணர் பெண்கள் பாடசாலையிலே இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனையாளர் கௌரவிப்புகள் என்பது வெறுமனே சாதனை படைத்தவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டதாக அமையாது என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
இந்தக் கௌரவிப்பின் மூலம் ஏனைய மாணவர்களையும் தட்டி எழுப்புகின்ற எதிர்காலத்தில் அவர்களையும் ஊக்கப்படுத்துகின்ற செயற்பாடாகவே அமையும்.
இன்று கல்வியென்பது உங்கள் காலடியிலே பெறக் கூடிய அளவிற்கு இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் கல்வயை தேடிச் சென்று கற்றதே வரலாறு. ஆனால் தற்போது வசதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. எனவே பெற்றோர்கள், பிள்ளைகள், கல்விச் சமூகம் என்பன இணைந்து எமது சமூக மட்டத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த வேண்டும்.
நாங்கள் நீண்ட கால ஒரு யுத்தத்தில் சிக்குண்டு தவித்த ஒரு இனம். எங்களுக்கு கடந்த காலங்களில் பல புறக்கணிப்புகள் நடந்திருக்கின்றது. நாங்கள் பாதிக்கப்பட் இனமாக இருந்தாலும் தற்போதைய இந்தச் சூழல்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முப்பது வருட யுத்தம் தமிழ் மக்கள் மத்தியிலே சர்வ சாதாரண பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. கூடுதலாக எமது கல்விச் சமூகம் முற்றகா அழிக்கப்பட்டது. எதிர்காலத்திலும் நாங்கள் பல சவால்களுக்கு முகங்கொடுப்பவர்களாக எங்களுடைய சமூக மாணவர்களைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது.
இன்று எமது சமூகத்திலே மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. கடந்த சில காலங்களில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்கள் கூட அதிகளவில் தற்கொலை செய்து கொண்ட அறிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே ஏற்படுகின்றன. எமது மாணவர்கள் மத்தியில் மனவலிமையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
எமது மாணவர்கள் மத்தியில் விளையாட்டுப் பயிற்சிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும். எந்தவொரு படைக்கும் பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. ஏனெனில் பயிற்சிகள் மூலம் தான் உள ரீதியான வலிமையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எங்களுடைய சமூகத்தில் அவ்வாறான செயற்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
தங்களது பிள்ளைகளை தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் வைத்துக் கொண்டு கல்வியை ஊட்டுவதன் ஊடாக இந்த சமுதாயத்திலே பலம் மிக்க தலைவர்களை உருவாக்க முடியாது. நாங்கள் விளையாட்டுகளிலும் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும்.
இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன் விளையாட்டினையும் சேர்த்து கட்டியெழுப்புவதன் ஊடாகவே எமது சமுகத்திற்கும், பிரதேசத்திற்கு, இந்த நாட்டிற்கும் பொருத்தமான எதிர்கால சந்ததியை உருவாக்கிக்கொள்ள முடியும்.
ஆனால் இன்று குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே மாணவர்கள் மத்தியில் மிகவும் மோசமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது. யுத்தத்தின் பாதிப்பை விட இன்று அதிகமான இளம் சமூகம் இந்த போதைப் பொருள் பாவனையால் சீPரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயத்தில் பெற்றோர்களே கூடுதலான கவனம் எடுக்க வேண்டும். எமது மாணவ சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. இந்தப் பிரதேசத்திற்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் பொருத்தமான மாணவ சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவர் கைகளிலும் இருக்கின்றது என்று தெரிவித்தார்