யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மிக அண்மைக் காலமாகக் குறுகிய காலத்தினுள் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள் கட்டுக்கட்டாகக் காணாமல் போனதை அறிந்து கொண்ட நிர்வாகம், இது குறித்துப் பொலீஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்தே கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராமரிப்புக் கிளையில் பணியாற்றும் அமைய ஊழியர்கள் சிலரே இந்தக் கையாடலில் ஈடுபட்டார்கள் என்று மேலதிகாரிகள் குற்றஞ்சாட்டி அது தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு, அவ் அமைய ஊழியர்கள் மீது பழியைப் போட்டு மூடி மறைக்க முயன்ற போதிலும், அவ் ஊழியர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சிலரும் இக் கையாடலுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே பொலிஸாரின் உதவி நாடப்பட்டதாகவும், பொலிஸார் பல்வேறு தரப்பாரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.