கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவையில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான சீரான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது குறிப்பிட்ட சில பிரதேசங்களக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேருந்து சேவைகள்
அத்துடன் பின்தங்கிய பல பிரதேசங்களுக்கு பேருந்து சேவைகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதும் அவற்றை தட்டிக்களித்து சேவைகள் வழங்கப்படுவதில்லையெனவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி பேருந்து சாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது மாவட்டத்தில் சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் 28 வரையான பேருந்துகள் உள்ளன.

ஆனாலும் 14 வரையான சாரதிகளும் 14 நடத்துனர்களும் வெற்றிடங்களாக நிரப்பப்படாத நிலையில் காணப்படுவதனால் குறித்த முழுமையான சேவைகளை முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாரதிகளின் பிரச்சினை
அதேநேரம் தற்போது கடமையாற்றும் நடத்துனர்களும் சாரதிகளும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தே சேவைகளில் ஈடுபடுகின்றனர்.

உரிய தங்குமிட வசதியின்மை காரணமாக அவர்கள் தங்கியிருந்து உரிய நேரத்திற்கு சேவைகளை வழங்க முடியாத நிலை என பல்வேறு காரணங்களால் குறித்த பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாது இருப்பதாக தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor