முல்லைத்தீவு ஏ-35 வீதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புணரமைக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பாலம் தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான பாலம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலமானது மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன் இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதுடன் உயிரிழப்புக்களும் கூட நிகழ்ந்துள்ளன.
எனவே இப்பாலம் புனரமைக்கப்பட வேண்டுமென்ற என்ற கோரிக்கை கடந்த 13 வருடங்களாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த பாலத்தினை புனரமைப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையென கடந்த 2016ம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதிகளும் பெறப்பட்ட போதும் புனரமைப்பு பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பல்வேறு தரப்பினரும் கோரிக்கை
அதாவது அதற்கான நிதி கிடைக்காமையினால் இதனைப் புனரமைக்க முடியாதுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக பிரதேச மற்றும் மாவட்ட மட்ட ங்களில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்களிலும் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அதன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமையினால் மேற்படி பாலம் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்ள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்கள் கூட ஏற்படுகின்றன என்றும் இதனை புனரமைப்பதற்கான நிதியை பெற்று இதனை புணரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.