துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்ற விமானம் கடத்தப்பட்டதாக ட்வீட் செய்ததற்காக 29 வயதான துபாயைச் சேர்ந்த பொறியாளர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை மோதி சிங் ரத்தோர் என்ற பொறியாளர் துபாயில் இருந்து செய்பூருக்கு விமானம் மூலம் பயணித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் வானிலை சரி இல்லாத காரணத்தால் விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மோதி விமான ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 9.45 மணியளவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ரத்தோர் விமானம் “ஹைஜாக் செய்யப்பட்டது” என்று ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அந்த டிவீட்டில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை டேக் செய்துள்ளார்.
ட்வீட் பற்றி தகவல் அறிந்த காவல்துறை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறை உடனே சம்பந்தப்பட்ட விமானத்தை அடைந்து சோதனைகளை மேற்கொண்டது. மேலும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் சோதனை செய்யப்பட்டு மதியம் 1.40 மணிக்கு மீண்டும் ஜெய்ப்பூர் புறப்பட்டது.
ஹைஜாக் தொடர்பாக ஏதும் கிடைக்காத நிலையில் பொய்யான தகவலை வெளியிட்ட மோதியை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது IPC பிரிவுகள் 341 (தவறான தகவலை வெளியிட்டது ), 505 (1) (b) (பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்), மற்றும் 507 ( அடையாளம் மறைக்கப்பட்ட தொடர்பு மூலம் குற்றமிழைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிசிபி (ஐஜிஐ விமான நிலையம்) ரவி குமார் சிங் “ரத்தோர் தனது பைகளுடன் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். தவறான தகவலோடு ட்வீட் மற்றும் விமானத்தில் கடுமையான நடத்தை குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. விமான ஊழியர்கள் அவரை எங்களிடம் ஒப்படைத்தனர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.