உலக நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையிலும் தொடர்ந்தும் கோவிட் தொற்று ஆபத்து நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவுவதை தொற்றுநோயியல் பிரிவு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
எனவே நான்காவது எதிர்ப்பு கோவிட்-19 தடுப்பூசியாக (இரண்டாவது பூஸ்டர் டோஸ்) சினோபார்ம் தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோயியல் பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பைசர் தடுப்பூசி நான்காவது டோஸாக வழங்கப்பட்ட நிலையில் தடுப்பூசி காலாவதியான பின்னர் சுகாதார அமைச்சகம் தடுப்பூசிகளை அகற்றியிருந்தது. அதன்படி நான்காவது டோஸாக சினோபார்ம் தடுப்பூசியை செலுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே மக்கள் எந்தவொரு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கும் (MOH) சென்று சினோபார்ம் தடுப்பூசியை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 2,678,038 சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளமையினால் கோவிட் டோஸ்களைப் பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற முடியும் என்று வைத்தியர் கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.