குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் உருவாக முக்கியக் காரணங்கள் என்னென்ன?

குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை அம்மாவின் கண்காணிப்பில் உணவு ஊட்டப்படும்போதும் குடற்புழுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, கைகளை அசுத்தமான இடங்களில் வைத்துவிட்டு அதே கைகளை வாயில் வைப்பது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற சுகாதார மின்மைப் பிரச்னைகளால் குழந்தைகள் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

குழந்தைகள், வளர்ந்தவர்களின் குடலில் நாடாப்புழு (Tape Worm), நூல் புழு (Thread Worm), கொக்கிப்புழு (Hook Worm), சாட்டைப்புழு (Whip worm), தட்டைப்புழு (Round Worm) எனப் பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவை பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அளவிலும் வடிவத்திலும் வேறுபடும் இந்தப் புழுக்கள், பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காற்று பிரியாமல் இருப்பது, உணவில் நாட்டமின்மை, எடைக்குறைவு, சத்துக்குறைவு, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளை நாடாப்புழு ஏற்படுத்தும். உறக்கமின்மை, சிறுநீர்க் கழிக்கும்போது வலி போன்ற பிரச்னைகளை நூல்புழு ஏற்படுத்தும்.

கொக்கிப்புழு பாதிப்பு தீவிரமாகும்போது இருமல், மூச்சிரைப்பு, ரத்தச்சோகை, சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கொக்கிப் புழுக்கள் ஆசனவாயைச் சுற்றி முட்டையிடும். அதனால் அங்கு குழந்தைகள் விரல்களால் சொறியும்போது, அந்த முட்டைகள் விரல் இடுக்குகள், விரல்களில் சேர்ந்துகொள்ளும்.

அந்த விரல்களால் புத்தகம், ரிமோட், தட்டு என்று எந்தெந்தப் பொருள்களை எல்லாம் தொடுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த முட்டைகள் பரவும். அந்தப் பொருள்களைத் தொடுபவர்களையும் தொற்றிக்கொள்ளும். குழந்தைகள் அந்த விரலை வாயில் வைக்க நேர்ந்தால், மிகவும் கெடுதல்களை விளைவிக்கும். எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் குடற்புழுப் பாதிப்பை தவிர்க்கலாம். அவை…

* கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

* குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

* ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

* குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

* பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

* வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும்.

* மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

* விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்

Recommended For You

About the Author: webeditor