யாழ் மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம் பெற்ற தருணம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தமை மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையினை உரிய முறையில் செய்ய தவறியுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்களை உரிய முறையில் செய்யத் தவறியமையே ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்குள் உள்ள நுழைய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தமது உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது வழக்கம்.
நீதி அமைச்சர் வந்த இன்றைய தருணத்தில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது என்று தகவல் தெரிந்த நிலையிலும் அதற்கு ஏற்றவாறு பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தாது போராட்டக்காரர்கள் அத்துமீறி மாவட்ட செயலகத்திற்கு உள் நுழைவதற்கு யாழ்.மாவட்ட பொலிசார் காரணமாக இருந்தனர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த நடமாடும் சேவை இடம்பெறுகின்ற வேளையில் நீதி அமைச்சருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்த உள்ளனர் என்ற தகவலினை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிந்து வைத்திருந்த நிலையிலும் குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்தி போராட்டக்காரர்களை யாழ் மாவட்ட செயலகத்திற்குள் உள் நுழையாதவாறு தடுப்பதற்கு பொலிசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது பிரதான வாயில் கதவினை திறந்து அவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனை அடுத்து உள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடமாடும் சேவை இடம் பெற்ற நிலையத்திற்கு வந்து தமது உரிமை கோரி அங்கு அரச கடமையில் ஈடுபட்டவர்களை வெளியேறுமாறும் போராட்டத்தை மேற்கொண்டனர் இதற்கு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடந்தையாக செயற்பட்டாரா? என்ற கேள்வி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பல்வேறு அதிகாரிகளாலும் எழுப்பப்படுகின்ற ஒரு விடயமாக இருந்து வருகிறது.
அத்துடன் அவரின் தலைமையின் கீழ் இயங்கி வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சரியான தகவலை வழங்கவில்லையா? அல்லது பொலிசார் பாதுகாப்பை வழங்கவில்லையா? என மாவட்ட செயலக அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.