தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை.
இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவுப்படி மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பு குறித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:
மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத அளவு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்த பிறகு காலம் கடந்த ஏமாற்றம் தரும் அறிவிப்பாகும். இந்த ஈரப்பத உயர்வு அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுவும் 22 சதவீதம் கேட்டதற்கு பெயரளவிற்கு 19 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். குறுவைக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு பலமுறை தொடர்ந்து கோரியும், மத்திய மாநில அரசுகள் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் பயிர் காப்பீடும் செய்யப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய 15 நாட்களுக்கு பிறகு தான் மத்திய குழு ஆய்வு நடத்தியது. அந்த மத்திய குழுவும் அறிக்கை தாக்கல் செய்த 10 நாட்களுக்கு பிறகு தான் 19 சதவீதம் நெல் ஈரப்பதம் தளர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இப்படி அனைத்துமே கால தாமதம் தான். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதுவும் 22 சதவீதம் என கேட்டதற்கு 19 சதவீதத்திற்கு தான் அனுமதி கொடுத்துள்ளது. உரிய நேரத்தில் செய்யும் உதவி தான் சால சிறந்தது. அதனை மத்திய அரசு செய்யவில்லை.
எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் குறுவை பருவத்தில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நிலையான அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பலன் அடைவர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார்:
ஒவ்வொரு குறுவை பருவத்திலும் ஈரப்பத தளர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், பின்னர் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் பெயரளவிற்கு தளர்வு அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்க வேண்டும்.
குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம். மேலும் ஈரப்பத தளர்வு குறித்து மாநில அரசு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும்.
தற்போது அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே கால தாமதம் தான். அறுவடை பணிகள் கிட்டதட்ட முடியும் நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது.
தஞ்சை விவசாயி ரவிச்சந்திரன்: மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல். அதுவும் விவசாயிகள் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல் ஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் 19 சதவீதம் என்பது போதாது.
எனவே உடனடியாக 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். சம்பா நெல் கொள்முதலுக்கு 23 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தரமாக உலர் எந்திரங்களை அமைக்க வேண்டும்.