யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சொந்த ஊராகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.விஸ்வநாதன் (விஸ்வா)அவர்களின் நாற்பத்தியொன்பதாவது(49)பிறந்ததின நிகழ்வானது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேசசபை,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ந.விந்தன் கனகரட்ணம், தலைமையில் 27/10/2022 அன்று நடைபெற்றது.
புலத்தில் இருந்தாலும் தாய் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்து பல வருடங்களாக வறிய நிலை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்,சுய தொழில் முயற்சிக்கான உதவிகள்,மருத்துவ உதவிகள்,பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வி வகுப்புக்கள்,மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்,மாணவர்களை விளையாட்டுத்துறையில் கலைத் துறைகளில் ஊக்குவித்து மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கல்,கல்வி,கலை,விளையாட்டுத் துறைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களை மதிப்பளித்து கெளரவித்து சான்றிதழ்கள்,நினைவுச் சின்னங்கள்,பரிசு பொருட்கள் வழங்கல்,எனப் பல சமூக சேவைகளை இடை விடாது செய்து வரும் ஒரு மனித நேயம்மிக்க,மகத்தான,சமூக திலகமாய் விளங்கி,ஈழத்தின் ஈகையாளனாக தன்னை அடையாளப்படுத்தி மண்ணுக்காக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவை புரிந்து வரும் விஸ்வா அவர்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் சொத்து.
!எமது மக்களின் பேரன்பிற்கும் பெரு மதிப்புக்கும் உள்ளான அவரை கெளரவிக்கும் முகமாக திரு விந்தன் கனகரட்ணம்,திரு இராசதுரை கிருஷாந்தன்,திருமதி கஜேந்தினி கிருஷாந்தன் ஆகியோரின் வழிப்படுத்தல் நெறிப்படுத்தல் ஒழுங்கு படுத்தலில் பல நூற்றுக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் அழைத்து பிறந்தநாள் பெருவிழா நடாத்தப்பட்டது,குறித்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.ஜெயகரன்,முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரும் சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய இ.மயில்வாகனம்,தமிழ்த் தேசியப் பற்றாளனும் சமூக சேவையாளருமான நி.சில்வஸ்ரர் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினர்.
இன்றைய நிகழ்வில் பல பாடசாலைகளின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடை பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசு பொருட்கள்,நினைவுச் சின்னங்கள்,கற்றல் உபகரணங்களும் பாடசாலை பொறுப்பாசிரியர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன, அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இராப்போசனமும் வழங்கப்பட்டது.விழா நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை இன்றைய விழாவின் நாயகன் திரு விஸ்வா அவர்கள் டென்மார்க்கில் இருந்து வழங்கியிருந்தார்.