சிட்னியின் புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் புறப்பட்டது
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்கு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வெஸ்டர்ன் சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது சர்வதேச விமானம் இன்று (ஒக்டோபர் 26) புறப்பட்டுள்ளது.
சுமார் 5.3 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திட்டமிடலுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து வந்த ஏர் நியூசிலாந்து விமானம் தரையிறங்கி, பின்னர் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் வாரத்திற்கு மூன்று தடவைகள் முன்னெடுக்கப்படும் விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.
24 மணிநேரமும் இயங்கும் வசதியைக் கொண்டுள்ள இந்த விமான நிலையம், மேற்கு சிட்னியின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

