“ஆட்சி அதிகாரத்தை இழந்து சரிந்து விழும் பிரான்ஸ்!”

“ஆட்சி அதிகாரத்தை இழந்து சரிந்து விழும் பிரான்ஸ்!” –

மக்ரோன் அரசு மீது மரின் லூ பென் கடும் தாக்குதல்;

பிரதமரின் அவசரக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு!

அதிபர் வேட்பாளரான தீவிர வலதுசாரி (RN) தலைவி மரின் லூ பென், பிரான்ஸ் தேசம் தற்போது “சரிந்து வரும் ஒரு அரசையும், அதிகாரத்தை முழுமையாக இழந்து நிற்கும் இறுதிக்கட்ட ஆட்சியையும்”

எதிர்கொண்டுள்ளதாக ஆளும்தரப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த வன்முறைகள் “முன்கூட்டியே கணிக்கக்கூடியவைதான்” எனக் கூறிய அவர், “ஒவ்வொரு போராட்டத்தின் போதும்,

ஒருபுறம் திட்டமிட்டுச் செயல்படும் தீவிர இடதுசாரிக் கலவரக்காரர்களையும், மறுபுறம் புறநகர்ப் பகுதிகளிலிருந்து (banlieues) வரும் கொள்ளையர்களையும் நாம் பல ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி குறித்து விவாதிக்கப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தானோ அல்லது தனது கட்சியின் தலைவர்

ஜோர்டான் பார்டெல்லாவோ இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மரின் லூ பென் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல; அரசாங்கம் எப்போதெல்லாம் நெருக்கடியில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நாடகமாடும்” என அவர் விமர்சித்துள்ளார்.

“மேலும், இந்தக் கூட்டத்தை முற்றுமுழுதாகக் குழப்புவதற்காகவே அதில் பங்கேற்கப் போவதாக தீவிர இடதுசாரி கட்சியான LFI ஏற்கனவே அறிவித்துவிட்டதால், பிரதமரின் இந்தக் கூட்டம் வெறும் கேலிக்கூத்தாகவே (cirque) மாறப்போகிறது” எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Recommended For You

About the Author: admin