“தாங்க முடியாத மரண அடி”: 1,500 கடைகள் சூறை; கண்ணீரில் தவிக்கும் பிரான்சின் சிறு வணிகர்கள்

“தாங்க முடியாத மரண அடி”: 1,500 கடைகள் சூறை; கண்ணீரில் தவிக்கும் பிரான்சின் சிறு வணிகர்கள்

அக்டோபர் 17 அன்று பிரான்ஸ் நகரங்களை உலுக்கிய வன்முறைகள், சூறையாடல்கள் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளன.

 

தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள், அதீத விலைவாசி உயர்வு மற்றும் நகர மையங்களில் வாடிக்கையாளர் வருகைக் குறைவு ஆகியவற்றால் ஏற்கனவே தத்தளித்து வந்த பல சிறு வணிகர்களுக்கு இந்த நாசவேலை

 

“தாங்க முடியாத இறுதி மரண அடியாக” (le coup de trop) மாறியுள்ளதாக வணிக அமைப்புகள் கண்ணீருடன் எச்சரித்துள்ளன.

 

பிரான்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (CCI France) நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

ஏற்றுக்கொள்ள முடியாத இந்த வன்முறைகள் பாரிஸ், மார்சே, லியோன், சென்-எட்டியென், நீஸ் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பெருநகரங்களின் மைய வீதிகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளதாகக் கண்டித்துள்ளது.

 

கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, இரும்பு ஷட்டர்கள் இழுத்து அறுக்கப்பட்டு, சரக்குகள் கொள்ளையடிக்கப்பட்டதோடு பல இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

 

வணிக மற்றும் விநியோகக் கூட்டமைப்பின் (FCD) தலைவர் அலெக்ஸாண்ட்ரே பொம்பார்ட் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் மதிப்பீட்டின்படி,

 

நேற்று நடைபெற்ற ஒரே நாள் வன்முறையில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 1,500 வணிக நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதனால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பீடு மற்றும் சேதங்களின் மதிப்பு பல நூறு மில்லியன் யூரோக்களைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

“எங்கள் நகரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க தினந்தோறும் போராடி வரும் சிறு வணிகர்களைக் குறிவைத்து இத்தகைய அராஜகங்களை நிகழ்த்தியது

 

முற்றிலும் மன்னிக்க முடியாத செயல்; வணிகர்களுக்கு இப்போது தேவைப்படும் நேரத்தில் அவர்களைத் தனியாக விட்டுவிடாமல் அரசும் சமுதாயமும்

 

இணைந்து உடனடி கூட்டு நிவாரணத்தை வழங்க வேண்டும்” என்று சிசிஐ பிரான்ஸ் தலைவர் அலன் டி கிரெசென்ஸோ வலியுறுத்தியுள்ளார்.

 

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்க

 

அரசு இயந்திரமும் அமைச்சகங்களும் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்க்யூர் உறுதியளித்துள்ளார்.

 

தங்களின் வாழ்நாள் உழைப்பை ஒரே இரவில் சாம்பலாகவும் சிதைவுகளாகவும் பார்த்து நிற்கும் ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள், அரசாங்கத்தின் உடனடி இழப்பீட்டுப் பொதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin