பாரிஸ் காவல்துறை ஒரு பிரத்தியேகமான ‘அதிரடிப்படையை (Task force) ரகசியமாகக் களமிறக்கியுள்ளது

பாரிஸ் காவல்துறை ஒரு பிரத்தியேகமான ‘அதிரடிப்படையை (Task force) ரகசியமாகக் களமிறக்கியுள்ளது

பிரான்ஸை உலுக்கும் கலவரத் தீ: வேட்டையைத் தொடங்கிய காவற்துறை… பதைபதைப்பில் நகரங்கள்!

அக்டோபர் 17 அன்று தொடங்கிய மக்களின் சமூகப் போராட்டம், இன்று ஒட்டுமொத்த பிரான்ஸையும் ஒரு போர்க்களமாகவே மாற்றிவிட்டது. எங்குப் பார்த்தாலும் தீப்பிழம்புகள்,

 

உடைந்த கண்ணாடிகள், சூறையாடப்பட்ட கடைகள் என வீதிகள் எங்கும் வன்முறையின் கோரத்தாண்டவம் அரங்கேறி வருகிறது.

 

அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் இருள் கவ்வத் தொடங்கியதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, பல நூறு மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தேசத்தின் சொத்துகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளது.

 

நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இரக்கமின்றி அப்பட்டமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 

தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் உள்ள பிரம்மாண்டமான ‘BHV Marais’ வணிக வளாகத்திற்குள் புகுந்த 30 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் தரைத்தளத்தை முற்றிலுமாக அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.

 

பாரிஸ் மட்டுமன்றி, போர்டோ நகரில் 100 கடைகளும், துலூஸ் நகரில் 40 கடைகளும் இந்தக் கலவரத்தீயில் சிக்கிச் சாம்பலாகியுள்ளன.

 

நிலைமை முற்றிலும் கைமீறிப் போவதைக் கண்ட அரசாங்கம் தற்போது தனது இரும்புக்கரங்களைக் கொண்டு அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது!

 

உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களின் நேரடிக் கண்காணிப்பில், சனிக்கிழமை முதல் இதுவரை 2,331 பேர் கொத்தாகத் தூக்கப்பட்டுத் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களில் 70 சதவீதமானவர்கள் சிறுவர்கள் அல்ல, நன்கு திட்டமிட்டுச் செயல்பட்ட வயதுவந்தவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி! ஞாயிறு இரவு மட்டும் மேலும் 350 வன்முறையாளர்கள் காவற்துறையின் வலையில் சிக்கியுள்ளனர்.

தப்பிச் சென்ற வன்முறையாளர்களைப் பிடிக்கப் பாரிஸ் காவல்துறை ஒரு பிரத்தியேகமான ‘அதிரடிப்படையை (Task force) ரகசியமாகக் களமிறக்கியுள்ளது.

சிசிடிவி காணொளிகள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகளை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து, குற்றவாளிகளின் வீடுகளுக்கே சென்று கதவைத் தட்டும் ஆபரேஷன் விடிய விடிய நடந்து வருகிறது. பதற்றத்தின் உச்சமாக, கலவர பூமியாக மாறியுள்ள மார்சேய் நகரில் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை யாரும் வீதிக்கு வரவோ, கூடவோ கூடாது என அதிரடித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்வாதாரத்தை இழந்து, உடைந்த கண்ணாடிகளுக்கு நடுவே கண்ணீருடன் நிற்கும் வியாபாரிகளுக்கு உயிர்ச்சஞ்சீவியாக, ‘Crédit Agricole’ வங்கி களத்தில் இறங்கியுள்ளது.

கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை இயந்திரங்களை (TPE) இலவசமாக மாற்றித் தருவதோடு, வெறும் 48 மணி நேரத்திற்குள் 2.5% வட்டியில் 20,000 யூரோக்கள் வரையிலான அவசரகாலக் கடன்களையும் வழங்கி வியாபாரிகளின் துயரைத் துடைக்க முன்வந்துள்ளது.

 

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஜெர்மனி அரசாங்கம், “பிரான்ஸ் முழுவதும் அடுத்த சில நாட்களுக்குக் கலவரம் மேலும் வெடிக்கலாம்; ஆகையால் எங்கள் நாட்டு மக்கள் போராட்டக் களங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்சின் வீதிகளில் நடக்கும் இந்தத் திக்… திக்… நொடிகள் எப்போது ஓயும் என ஒட்டுமொத்த நாடும் பதைபதைப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது!

Recommended For You

About the Author: admin