ஏடனில் உள்ள யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!!

ஏடனில் உள்ள யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!!

5 பேர் பலி, 16 பேர் காயம் – பிரதமர் உயிர் தப்பினார்!

யேமனின் தற்போதைய தற்காலிகத் தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள அல்-மாஷிக் (Al-Maashiq) ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.

இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் என யேமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே (Qasim Buhaibeh) உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரும் மாளிகையின் சிவில் ஊழியர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரச படைகளும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியும் தளமாகப் பயன்படுத்தி வரும்

மாளிகை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் கட்டளை மையங்களே இத் தாக்குதலின் பிரதான இலக்குகளாக இருந்துள்ளன.

ஹூதி அமைப்பினர் யேமன் அரசப் படைகளின் கட்டளை மையத்தின் மீது மூன்று ஏவுகணைகளையும், சவூதி கூட்டணிப் படைகளின் மையத்தின் மீது இரண்டு ஏவுகணைகளையும் வீசித் தாக்கியுள்ளனர்.

சவூதி அதிகாரிகளின் தலைமையில் இயங்கியதாகக் கூறப்படும் அத்தளத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமையகம் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களையே தாம் குறிவைத்ததாக ஹூதி சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடைபெற்ற வேளையில் யேமன் பிரதமர் ஷயா அல்-சந்தினி (Shaya al-Zindani) ஜனாதிபதி மாளிகையிலேயே இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் அல்-சந்தினி தலைமையிலான அமைச்சரவை:

“ஹூதி கிளர்ச்சியாளர்களின் இவ்வாறான வன்முறைத் தாக்குதல்கள் எமது படைகளின் மன உறுதியைக் குலைக்காது.

யேமனின் நடைமுறைத் தலைநகரமாக ஏடன் தொடர்ந்து செயற்படும்” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனின் உத்தியோகபூர்வ தலைநகரான சானாவை (Sanaa) கைப்பற்றி நாட்டின் பெரும்பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசுக்கு ஆதரவாக 2015 இல் சவூதி அரேபியா தலைமையிலான அரபு இராணுவக் கூட்டணி களமிறங்கியது.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போரில் 2022 ஆம் ஆண்டு எட்டப்பட்ட போர்நிறுத்தம் அண்மையில் முறிவடைந்ததையடுத்து, தற்போது மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

இதேவேளை, சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பினர் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.

இந்த மாதத்தில் மட்டும் சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை ஹூதி அமைப்பினர் 20 முறை குறிவைத்துள்ளதாக சவூதி கூட்டணி செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin