ஜிபூட்டி கடற்பரப்பில் 305 குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து!!

ஜிபூட்டி கடற்பரப்பில் 305 குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து!!

15 சிறுவர்கள் உட்பட 139 பேர் பலி – 84 பேர் மாயம்!

ஆபிரிக்க நாடான ஜிபூட்டியின் கடற்பரப்பில் 305 குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில்

கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 139 பேர் உயிரிழந்துள்ளதாகக் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (IOM) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

இவ் விபத்தில் மேலும் 84 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிர் தப்பியவர்களின் தகவல்களின்படி, ஒக்ரோபர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவு வேளையில் ஜிபூட்டியிலிருந்து யேமனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே,

 

ஒபோக் (Obock) மீன்பிடி நகருக்கு வடக்கே குஹேரே (Guhere) பகுதிக்கு அருகாமையில் இப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இப் படகு கவிழ்ந்த விபத்தில் உயிர் தப்பிய 82 பேரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் குடியேற்ற முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

உயிர் தப்பியவர்களில் 64 பேருக்கு ஒபோக் நகரில் உள்ள IOM முகாமில் மருத்துவ வசதிகள், உளவியல் ஆலோசனைகள், உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

ஜிபூட்டி அதிகாரிகளுடன் இணைந்து IOM அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களை முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் உள்ளூர் நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.

 

ஆபிரிக்காவின் கொம்புப் பகுதிக்கும் (Horn of Africa) அரேபிய தீபகற்பத்திற்கும் இடையிலான ‘

 

கிழக்கு வழித்தடம்’ (Eastern Route) என அழைக்கப்படும் புலம்பெயர்வுப் பாதையில் பதிவான மிக மோசமான படகுப் பேரழிவுகளில் ஒன்றாக இது வர்ணிக்கப்பட்டுள்ளது.

 

“இது பேரழிவை ஏற்படுத்திய பாரிய மனித உயிரிழப்பு. உயிர் தப்பியவர்கள் மற்றும் தமது அன்பிற்குரியவர்களை இழந்த,

 

அவர்களின் தகவல் தெரியாமல் தவிக்கும் குடும்பங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

 

சிறந்த பொருளாதார வாய்ப்புகளைத் தேடி இடம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் தீவிர ஆபத்துக்களை இத்துயரச் சம்பவம் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தியுள்ளது”

 

என ஜிபூட்டிக்கான IOM தூதுக்குழுவின் தலைவர் அலெக்ஸாண்ட்ரே கொய்சாக் (Alexandre Coissac) தெரிவித்துள்ளார்.

 

ஆபத்து நிறைந்த வழித்தடங்களில் இந்த கிழக்கு வழித்தடமும் ஒன்றாகும். வளைகுடா நாடுகளை,

 

குறிப்பாகச் சவூதி அரேபியாவை அடைவதற்காக எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் இவ்வழியைப் பயன்படுத்துகின்றனர்.

 

உள்நாட்டு மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும், வேலைவாய்ப்புகளை நாடியும் இவர்கள் இப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

 

கடும் பாலைவன வெயிலில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொள்வதாலும், ஆட்கடத்தல்காரர்கள் சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமாக

 

ஆட்களை ஏற்றிச் செல்வதால் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் படகுகள் கவிழ்வதாலும் பெருமளவான மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றது.

Recommended For You

About the Author: admin