சூடானில் தங்கச் சுரங்கப் பகுதியில் வான்வழித் தாக்குதல்!!
குறைந்தது 72 தொழிலாளர்கள் பலி என மனித உரிமை கண்காணிப்பகம் தகவல்!
சூடானின் எகிப்து எல்லைக்கு அருகிலுள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கப் பகுதியொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில்
குறைந்தது 72 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான ‘எமர்ஜென்சி லாயர்ஸ்’ (Emergency Lawyers) தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு சூடானில் எகிப்து எல்லையை ஒட்டிய பகுதியில் இயங்கி வந்த உள்ளூர் தங்கச் சுரங்கப் பகுதியை இலக்கு வைத்து சனிக்கிழமை இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை எகிப்திய இராணுவ விமானங்கள் மேற்கொண்டதாக சூடானிய மனித உரிமை அமைப்பான எமர்ஜென்சி லாயர்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், உயிரிழப்புகள் மற்றும் தாக்குதல் நடத்திய தரப்பு தொடர்பான தகவல்கள் மனித உரிமை அமைப்பினால் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில்,
சுயாதீன அமைப்புகளாலோ அல்லது உத்தியோகபூர்வ இராணுவத் தரப்புகளாலோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்களையும் இழப்புகளையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

