யாழ். வேலணை அம்பிகை நகரைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் ஓராண்டு நிறைவையொட்டி அவர் ஞாபகார்த்தமாக அன்னாரின் பிள்ளைகளின் நிதி அனுசரணையுடன் தீவக உதை பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக வேலணை அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுத் தொடரில் கால் பந்தாட்டத்தில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய அல்லைப்பிட்டி சென் பிலிப்ஸ் விளையாட்டுக்கழக அணிக்கும் வேலணை அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டுக் கழக ஏ(A) அணிகளுக்குமிடையில் 18/10/2022 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சளைக்காமல் விளையாடி,போட்டியானது அணிகளுக்கிடையில் தலா ஒரு கோல் என சம நிலையில் முடிய,பின்பு தண்ட உதை மூலம் இரண்டுக்கு மூன்று கோல்கள் என அடித்து அல்லைப்பிட்டி சென் பிலிப்ஸ் அணி வெற்றி பெற்று சரஸ்வதி அம்மா, இவ்வாண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
கரப்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய வேலணை அம்பிகை நகர் மகேஸ்வரி விளையாட்டுக் கழக அணிக்கும் புங்குடுதீவு அம்பாள் விளையாட்டுக் கழக அணிக்குமிடையில் நடந்த போட்டியில் இவ்வாண்டுக்கான சரஸ்வதி அம்மா, வெற்றிக்கிண்ணத்தை அம்பிகை நகர் மகேஸ்வரி அணி தனதாக்கிக் கொண்டது.சிறப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டுக்கழக தலைவர் மு.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
விழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசாவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரான ந.விந்தன் கனகரட்ணம்,யாழ் பல்கலைக்கழக உடற் கல்வி விரிவுரையாளர் மா.இளம்பிறையன்,ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு மாவை சேனாதிராசா,விந்தன் கனகரட்ணம் ஆகியோரின் சிறப்புரையும் இடம் பெற்றன,மேலும் நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக ஜே/19 வேலணை பிரிவு கிராம அலுவலகர்,தி.கோகுலரூபன்,ஜே/18 வேலணை பிரிவு கிராம அலுவலகர் வ.கோகுலதாஸ்,திரு வேல்முருகன்(தலைவர் குடிநீர் வழங்கல் சபை அம்பிகை நகர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்,நிகழ்வின் அழைப்பாளர்களால் விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு விளையாட்டு தொடரில் முதலாம் இரண்டாம் இடத்தினை வென்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் பரிசுகளையும் பதக்கங்களையும் அணி வீரர்களுக்கு விருந்தினர் வழங்கி வைத்ததோடு விளையாட்டுகளின் தொடரின் சிறந்த வீரர்,சிறந்த கோல் காப்பாளர் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டு விருந்தினரால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் குறித்த விளையாட்டு நிகழ்வில் சமூக சேவையாளரும் வேலணை பிரதேசசபை உறுப்பினருமான க.நாவலன்,ஊர்காவற்துறை பிரதேசசபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிற்(சின்னமணி) அ.கனகையா,சமூக சேவையாளர்களும் முன்னாள் போராளிகளுமான குயிலன்,தனு, ஆகியோருடன் ஏராளமான பொது மக்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.