கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் வளாகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் நந்திக குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை டெங்கு அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அவசர தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்த சிரமதானப் பணியில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொரளை பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் சுகாதாரத்துறையின் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தின் தூய்மையையும் சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


