68 நாளா ஜெயிலில் இருந்தவனுக்கு தான் அந்த வலி தெரியும்..!

68 நாளா ஜெயிலில் இருந்தவனுக்கு தான் அந்த வலி தெரியும்..! “அன்னைக்கு காவிரி, இன்னைக்கு இளையராஜா”. ஆர்.ஜே பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட இடும்பாவனம் கார்த்திக்.!!!

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை சட்டப்போராட்டத்தைக் கேலி செய்யும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதற்குப் படக்குழு மன்னிப்பு கோரியுள்ள போதிலும், நடிகர் ஆர் ஜே பாலாஜி மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

அந்த வகையில், காவிரி நதிநீர் போராட்டத்தை அவமதிக்கும் விதமாக ஆர் ஜே பாலாஜி முன்பு பேசியதை நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தற்போது நினைவு கூர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில ஆண்டுகளாகத் தான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமை தனக்கே சொந்தம் எனத் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். தன்னிடம் அனுமதி பெறாமல் பாடல்களைப் பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக அவர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், அவரது இந்த உரிமைக் குரலைப் பலர் பணத்தாசை எனத் தவறாகச் சித்தரித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில், வழக்கறிஞர்கள் நடத்தும் ஒரு போராட்டக் களத்தில் அனுமதியின்றித் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக இளையராஜா காப்புரிமை வழக்குத் தொடர்ந்ததாகக் கேலி செய்யும் வகையில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. இது இளையராஜா ரசிகர்களிடையேயும், திரைத்துறையினர் சிலரிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமே இக்காட்சி வைக்கப்பட்டதாகவும், இளையராஜாவை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறி படக்குழுவினர் முறைப்படி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

படக்குழு வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கருப்பு படத்தில் ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு அதற்குப் படத்தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன். இச்சமயத்தில் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுபெற்றன. அப்போது, சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அங்கே போட்டி நடந்தால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியும், திரைக்கலைஞர்களும் போராடினோம்.

அன்றைக்கு இந்தப் போராட்டத்தைக் கேலி செய்து பேசிய இதே ஆர்.ஜே.பாலாஜி, ‘ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?’ எனப் பகடி செய்தார். அதனையே தான் நடித்த ‘எல்.கே.ஜி.’ திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாகக் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு மிகுந்த வலியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்றுவதை ஒருநாளும் ரசிக்க முடியாது. ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலிக்கு இடமில்லை என தற்போது உணர்ந்து கொண்டது போல, அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலிக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன் என்று இடும்பாவனம் கார்த்திக் தனது பதிவில் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா விவகாரத்தில் படக்குழு மன்னிப்பு கேட்ட பிறகும், ஆர் ஜே பாலாஜியின் பழைய அரசியல் கருத்துக்கள் தற்போது மீண்டும் உசுப்பப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைத்தள வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin