1968 மே ,பாரிஸின் வசந்தகாலப் புரட்சி:
(பாரிஸ் 14.05.2026 sci )
1968-ஆம் ஆண்டு, மே மாதத்தின் ஒரு காலைப் பொழுது. பாரிஸின் தெருக்கள் வழக்கமான சுறுசுறுப்புடன் விடிந்தன. ஆனால், காற்றில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அதுவரை பிரெஞ்சு சமூகம் ஒரு பழமைவாதக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தது. “பெரியவர்கள் (அதிகாரமுள்ளவர்கள்)சொன்னால் சிறியவர்கள் கேட்க வேண்டும்,” “அரசு சொல்வதே வேதம்” என்ற இறுக்கமான சூழல் நிலவிய காலம் அது.
கதை தொடங்கியது நாந்தேர் (Nanterre) பல்கலைக்கழகத்தில் . அங்கே இருந்த மாணவர்கள் ஒரு விசித்திரமான, ஆனால் நியாயமான கோரிக்கையை முன்வைத்தார்கள். “பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்கள் ஏன் சுதந்திரமாகச் சந்திக்கக் கூடாது? ஏன் இந்த ராணுவக் கட்டுப்பாடு?” என்று கேள்வி எழுப்பினார்கள். நிர்வாகம் அவர்களை மிரட்டியது. ஆனால், டேனியல் கோன்-பெண்டிட் என்ற மாணவனின் தலைமையில் அந்தச் சிறு தீப்பொறி, பாரிஸின் மையப்பகுதியான சோர்போன் (Sorbonne) பல்கலைக்கழகத்திற்குப் பரவியது.
மே 10-ஆம் திகதி இரவு. பாரிஸின் ‘Quartier Latin பகுதி ஒரு போர்க்களமாக மாறியது. காவல்துறையினர் மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். அப்போது மாணவர்கள் செய்த ஒரு காரியம் வரலாற்றில் நிலைத்து நின்றது. அவர்கள் பாரிஸின் அழகான தெருக்களில் பதிக்கப்பட்டிருந்த கற்களை (Pavés) ஒவ்வொன்றாகப் பிடுங்கினார்கள். அந்தக் கற்களைக் கொண்டு பெரிய தடுப்புகளை (Barricades) அமைத்தார்கள்.
துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு எதிராக, மாணவர்கள் கையில் இருந்தது வெறும் கற்களும், மனதில் இருந்த அபாரமான கனவுகளும் மட்டுமே. அப்போது அவர்கள் சுவர்களில் ஒரு வாசகத்தை எழுதினார்கள்: “Sous les pavés, la plage!” (இந்தக் கற்களுக்கு அடியில் கடற்கரை இருக்கிறது!). அதாவது, “இந்தக் கடினமான கட்டுப்பாடுகளைத் தகர்த்தால், அதன் அடியில் சுதந்திரமான மணல் பரப்பு காத்திருக்கிறது” என்ற ஆழமான அர்த்தம் அது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. மாணவர்களின் துணிச்சலைப் பார்த்த தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். “மாணவர்கள் போராடும்போது நாம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்?” என்று தொழிற்சாலைகளை மூடிவிட்டு வீதிக்கு வந்தனர். பாரிஸின் தொடருந்துகள் நின்றன, தொழிற்சாலைகள் அமைதியாயின.
திடீரென, சுமார் ஒரு கோடி மக்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இது ஒரு உலக சாதனை! அபோதைய அரசுத்தலைவர் சார்லஸ் து கோல், “என்ன நடக்கிறது என் நாட்டில்?” என்று திகைத்துப் போனார். ஒரு கட்டத்தில் அவர் ரகசியமாக ஜெர்மனிக்குச் சென்று ராணுவத்தின் ஆதரவைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பிரான்ஸ் தேசமே ஒரு பெரும் மாற்றத்திற்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தது.
யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தப் போராட்டம் ஒரு வன்முறைப் புரட்சியாக மாறாமல், ஒரு மாபெரும் சமூக உரையாடலாக மாறியது.
பழமைவாதம் உடைந்தது: குடும்பம், அதிகாரம், மதம் என எல்லாவற்றையும் இளைஞர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
பெண் விடுதலை: “என் உடல், என் உரிமை” என்ற குரல் அந்த வீதிகளிலிருந்துதான் வலுப்பெற்றது.
கலை மற்றும் இசை: ஜாஸ் இசையும், நவீன ஓவியங்களும், சுதந்திரமான ஆடைகளும் பாரிஸை அலங்கரிக்கத் தொடங்கின.
அந்த மே மாதம் முடிவுக்கு வந்தபோது, அரசியல் ரீதியாகப் பெரிய மாற்றம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், உலகம் முழுவதையும் அது தட்டி எழுப்பியது. அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்கள், மெக்சிகோவில் மாணவர் கிளர்ச்சி என உலகம் முழுக்க “எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் பிறந்தது.
இன்று நாம் பயன்படுத்தும் பல சுதந்திரங்கள்—சமூக வலைதளங்களில் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது முதல், தனிமனித உரிமை வரை—அன்று பாரிஸ் வீதிகளில் கற்களைப் பிடுங்கி எறிந்த அந்த மாணவர்களின் கனவுகளிலிருந்து முளைத்தவைதான்.
1968 மே மாதம் என்பது வெறும் திகதி அல்ல; அது “சாத்தியமற்றதைக் கேளுங்கள்” (Soyez réalistes, demandez l’impossible) என்று உலகிற்குப் போதித்த ஒரு மாபெரும் பாடம்.நமது இளையோர்களும் முள்ளிவாய்க்கால் வலை சுமந்த இந்த மாதத்தில் இந வரலாற்றை தேடிப்படிக்க வேண்டும்.

