மின்சாரப் பனிச்சறுக்கு முதல் தண்ணீரைச் சேமிக்கும் குளியல் வரை… வியப்பூட்டும் கண்டுபிடிப்புகள்!

Lépine கண்டுபிடிப்புப் போட்டி 2026: மின்சாரப் பனிச்சறுக்கு முதல் தண்ணீரைச் சேமிக்கும் குளியல் வரை… வியப்பூட்டும் கண்டுபிடிப்புகள்!

(பாரிஸ் 14.05.2026 sci )
1901-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற Lépine கண்டுபிடிப்புகளுக்கான போட்டியின் 125-வது பதிப்பு, பாரிஸ் கண்காட்சியில் (ஏப்ரல் 30 முதல் மே 11, 2026 வரை) சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பந்துமுனைப் பேனா (Ballpoint pen), புல்வெட்டும் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி(Ironbox) போன்ற நமது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் பலவும் ஒருகாலத்தில் இந்தப் போட்டியில் அறிமுகமானவையே!

இந்த ஆண்டு நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய சுமார் 250 கண்டுபிடிப்புகளில், 70 கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கவனத்தை ஈர்த்த சில அசாதாரணமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு இதோ:

1. முதல் பரிசு – நுண்நெகிழிகளை அகற்றும் நீர்மூழ்கி:
கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, கடலில் உள்ள கழிவுகள் மற்றும் நுண்நெகிழிகளை (Microplastics) உறிஞ்சி எடுக்கும் ஒரு புரட்சிகரமான நீர்மூழ்கிக் கருவிக்கு இந்த ஆண்டின் உயரிய முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

2. இரண்டாம் பரிசு – சக்கரங்கள் கொண்ட மின்சாரப் பனிச்சறுக்கு (Skwheel):
பனிச்சறுக்குக் காலணிகளைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள, சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சாரக் காலணிகளுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. பனிமலைகளில் மட்டுமின்றி, நகர்ப்புறச் சாலைகளிலும் வேலைக்குச் செல்பவர்கள் எளிதாகப் பயணிக்க அன்டாய்ன் மாஸ்பெஃப் (Antoine Massebeuf) என்பவர் இதனை உருவாக்கியுள்ளார். இது தற்போது சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3. மூன்றாம் பரிசு – திறன்மிகு அஞ்சல் பெட்டி (Securpost):
உங்கள் அஞ்சல் பெட்டியில் யாராவது ஒரு பொருளைப் போட்டாலோ அல்லது எடுத்தாலோ, உடனடியாக உங்கள் கைபேசிக்குத் தகவல் அனுப்பும் திறன்மிகு அஞ்சல் பெட்டி இது. இணையவழிப் பொருட்கள் தொலைந்து போவதைத் தடுக்கும் வகையில், பெட்டியில் உள்ள பொருளைப் புகைப்படம் எடுத்து அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

4. தண்ணீரைச் சேமிக்கும் குளியல் சாதனம் (Opty-O):
குளியலறையில் வெந்நீர் வரும் வரை குழாயில் வீணாகச் செல்லும் குளிர்ந்த நீரைச் சேமித்து மீண்டும் பயன்படுத்தும் ஒரு சிறப்புச் சாதனத்திற்குத் தங்கப் பதக்கமும், பாரிஸ் மாநகராட்சியின் சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. இதன் மூலம் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் நாளொன்றுக்கு 3 முதல் 10 லிட்டர் வரையிலும், ஆண்டுக்கு 160 முதல் 320 யூரோக்கள் வரையிலும் மின்கட்டணம் மற்றும் தண்ணீர் வரியைச் சேமிக்க முடியும்.

முந்தைய ஆண்டுகளில் முத்திரைப் பதித்த சில கண்டுபிடிப்புகள்:

இணையப் பகிர்வுப் பெட்டி (DotDot – 2025): நாம் பயன்படுத்தாமல் மீதமுள்ள இணையத் தரவுகளை (Data), நம்மைச் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பாகப் பகிர்ந்தளிக்கும் ஒரு சிறிய பெட்டி. இது வீடற்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இணைய வசதியை இலவசமாக வழங்க உதவுகிறது.

திறன்மிகு உதட்டுச்சாயம் (Maison M – 2025): செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரின் முக அமைப்பு, கண்கள் மற்றும் தோலின் நிறத்தை ஆராய்ந்து அவருக்கு ஏற்ற நிறத்தைப் பரிந்துரைக்கும் செயலியுடன் கூடிய உதட்டுச்சாயம். ஒரே குப்பியில் 3 வண்ணங்களைக் கொண்ட இது, விலங்குகளின் கொழுப்பு ஏதுமின்றித் தயாரிக்கப்பட்டது.

எளிமையான காலுறைப் பெட்டி (Eleganteazy – 2023): பெண்கள் தங்களின் பலவிதமான காலுறைகளை (Tights) ஒன்றோடு ஒன்று கலக்காமல், பெட்டியைத் திறந்தவுடன் எளிதாகத் தேடி எடுக்கும் வகையிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்புப் பெட்டி.

நவீன மிதிவண்டித் தலைக்கவசம் (Neoca – 2024): சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, அழகிய தொப்பிகளைப் போலவும், குளிர்காலக் குல்லாக்களைப் போலவும் மேல்புறத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய நவீனத் தலைக்கவசங்கள்

Recommended For You

About the Author: admin