இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்த 21,000-க்கும் மேற்பட்ட சிறுவர்களை நினைவுறுத்தும் காலனிகளும், பொம்மைகளும் உலகை உலுக்கின!
நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் உள்ள டேம் சதுக்கத்தில் (Dam Square), காசா போரில் உயிரிழந்த பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான காலணிகள் காட்சிப்படுத்தப்பட்ட செய்தி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் உலுக்காவிடினும் உலகை உலுக்கியிருக்கிறது.
‘ஒலிவ் மரத்தை நடுக’ (Plant an Olive Tree) என்ற அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12, 2026) இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்த 21,000-க்கும் மேற்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை அடையாளப்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான காலணிகள் மற்றும் பொம்மைகள் சதுக்கம் முழுவதும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
போரில் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டதுடன், ஊடகப் பணியின் போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் நிழற்படங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் உயிரிழப்புகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த அமைதியான போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோன்ற நிகழ்வுகள் முன்னதாக உட்ரெக்ட் (Utrecht) மற்றும் ரோட்டர்டாம் (Rotterdam) ஆகிய நகரங்களிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


