தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்குக் கவிதை வாசிப்பு: வலியைக் குறைத்து மொழியாற்றலை வளர்க்கும் புதிய முயற்சி!
பாரிஸ் நகரின் ‘ரொபர்ட் டெப்ரே’ (Robert Debré) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள குறைமாதக் குழந்தைகளுக்கு (Premature babies), கவிதைகள் வாசித்துக் காட்டப்படும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மூளை மற்றும் எதிர்கால மொழியாற்றல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது என்ற சுவாரசியமான மருத்துவ உண்மை வெளியாகியுள்ளது.
உயிர்காக்கும் இயந்திரங்களின் சத்தங்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில், Mathilde Toulot என்ற தன்னார்வலர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து குழந்தைகளுக்குக் கவிதைகளை வாசித்துக் காட்டுகிறார். தான் தொகுத்த “நீ இங்கு இருக்கிறாய்” என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து அவர் வாசிக்கும் இனிமையான வரிகள், உயிருக்குப் போராடும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பெரும் ஆறுதலாக அமைகின்றன.
29 வாரங்களிலேயே பிறந்து, வெறும் ஒரு கிலோ எடையுள்ள ‘வாரிஸ்’ (Waarys) என்ற குழந்தைக்குக் கவிதை வாசிக்கப்பட்டபோது ஒரு சுவாரசியமான மாற்றம் நிகழ்ந்தது. எப்போதும் உறங்கிக்கொண்டே இருக்கும் அக்குழந்தை, கண்களை அகல விரித்து அமைதியாகக் கவிதை கேட்டது. கவிதை கேட்கும்போது, குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 165-லிருந்து 145 ஆகக் குறைந்து, சுவாசம் சீரானது என மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் குறிப்பிடுகின்றனர்.
“தாயின் குரலுக்குக் குழந்தையின் வலியைப் போக்கும் (Painkiller) சக்தி உள்ளது. மேலும், கவிதையின் தாளமும் மெல்லிசையும் குழந்தைகளின் மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகளை (Neural connections) உருவாக்கி, அவர்களின் எதிர்கால மொழித் திறனை வளர்க்க உதவுகிறது” என்று அந்த மருத்துவமனையின் பேச்சு-மொழி நிபுணரான அடெல் பூலாஞ்சர் (Adèle Boulanger) கூறுகிறார். எனவே, பெற்றோர் தங்கள் பச்சிளம் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசவும், பாடவும் வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஐந்தரை மாதங்களிலேயே பிறந்து, 44 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழாய்கள் பொருத்தப்பட்டுக் கிடக்கும் ‘கர்டிஸ்’ (Curtis) என்ற குழந்தையின் தாய்க்கு இந்தக் கவிதைகள் ஒரு சிறந்த உளவியல் மருந்தாகச் செயல்பட்டுள்ளன. “இந்தக் கவிதைகளில் உள்ள நம்பிக்கையூட்டும் வரிகளே என் குழந்தையைக் காப்பாற்ற எனக்குப் பெரும் உதவியாக இருந்தன” என அந்தத் தாய் கண்ணீருடன் நெகிழ்கிறார்.
குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவதன் மருத்துவப் பயன்களை உணர்ந்த பின்லாந்து அரசு, 2022-ஆம் ஆண்டு முதல் “குழந்தைக்கு வாசிப்போம்” என்ற சிறப்புத் திட்டத்தை அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது. அங்குப் பிறக்கும் அனைத்துப் பச்சிளம் குழந்தைகளுக்கும் அரசு சார்பாகவே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ அறிவியலும், மனிதநேயமும், இலக்கியமும் ஒன்றிணைந்து பச்சிளம் தளிர்களைக் காப்பாற்றும் இந்த முயற்சி காண்போரை நெகிழச் செய்கிறது.

