ஐக்கிய அரபு அமீரகம் – பஹ்ரைன் நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் பதற்றம்:
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமெரிக்கா ஏதேனும் தவறிழைத்தால், தனது அண்டை நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் மீது படையெடுக்கத் தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு நிபுணர் மொர்தேசா சிமினாரி (Morteza Simiyari) அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ஈரானிய ஆயுதப் படைகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனின் கடலோரப் பகுதிகளில் ஊடுருவிப் படையெடுக்கும் முழுத் தி னைக் கொண்டுள்ளதாகவும், இதற்கான விரிவான பயிற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதால், அங்குள்ள ஈரானிய நிதிச் சொத்துக்கள் முடக்கப்பட்டாலோ அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ, அந்த நாட்டின் முக்கிய நிதி மையங்கள் மற்றும் வங்கித் துறைகளை ஈரான் இலக்கு வைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, போரைத் தற்காலிகமாக நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய யோசனையை ஈரான் நிராகரித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் போன்ற நிபந்தனைகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய மோதல்களில் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோல், லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் 1,100 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குவைத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் எனப் போர் விரிவடைந்து வரும் நிலையில், பிராந்தியத்தின் அமைதி பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

