அமெரிக்காவிற்குப் பாரிய அடி: சவுதியில் ஈரானின் ஏவுகணைத் தாண்டவம் – 5 போர் விமானங்கள் சேதம்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘Operation Epic Fury’ நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான 5 KC-135 Stratotanker ரக விமானங்கள் சேதமடைந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள பிரின்ஸ் சுல்தான் (Prince Sultan) விமானத் தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் திறனுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் விபரங்கள்:
அமெரிக்க உயர் அதிகாரிகள் இருவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியின்படி, குறித்த 5 விமானங்களும் தரையிறக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. இவை முற்றாக அழிக்கப்படாவிட்டாலும், பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. தற்போது இந்த விமானங்களைச் சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூலோபாயப் பின்னடைவு:
இந்த யுத்தம் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் இதுவரை அமெரிக்காவின் குறைந்தது 7 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை ஈராக்கில் நிகழ்ந்த விமான விபத்தில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது சவுதியில் ஏற்பட்டுள்ள இந்தச் சேதம் அமெரிக்க இராணுவத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்த விமானங்கள் இல்லாமல் நீண்ட தூரப் போர் விமானங்களால் ஈரானைத் தாக்குவது மிகவும் கடினமான விடையமாகும்.

