ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்: நோர்வேயில் தனது படைகளை இரண்டு மடங்காக உயர்த்துகிறது பிரித்தானியா!
ஆர்க்டிக் மற்றும் வடக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யாவின் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் விதமாக, நோர்வேயில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்தப்போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
தற்போது நோர்வேயில் உள்ள 1,000 பிரித்தானிய துருப்புக்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்காக நேட்டோவின் ‘ஆர்க்டிக் சென்ட்ரி’ (Arctic Sentry) என்ற நேட்டோ அமைத்துள்ள புதிய பாதுகாப்புப் பணியில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும்.
பனிப்போர் காலத்திற்குப் பிறகு ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மிக உயர்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், அங்குள்ள பழைய இராணுவத் தளங்களை ரஷ்யா மீண்டும் புதுப்பித்து வருவதாகவும் பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ‘எக்சர்சைஸ் கோல்ட் ரெஸ்பான்ஸ்’ (Exercise Cold Response) பயிற்சியில் சுமார் 1,500 பிரித்தானிய கடற்படை கமாண்டோக்கள் பங்கேற்க உள்ளனர்.
கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களைப் பாதுகாப்பதிலும், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பதிலும் நோர்வேயுடன் இணைந்து பிரித்தானியா தீவிரமாகச் செயல்படும்.
புவி வெப்பமடைதலால் ஆர்க்டிக் பகுதியில் புதிய கடல் வழித்தடங்கள் உருவாகி வரும் சூழலில், இப்பகுதி உலக அரசியலில் மிக முக்கியமான ஒரு போர்க்களமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


