நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள்
நல்லூரான் தெற்கு வாசல் வளைவு கட்டடமும் யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாசாரத்தை அடையாள படுத்தி உயர்வித்து நல்லூர் கந்தசுவாமியாரின் அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது.
சிறப்பாகக் கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பெற்று நடுவில் இரண்டு தளங்களைக் கொண்ட இராஜ கோபுரம் ஐந்து கலசங்களைக் கொண்ட அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.
கட்டடத்தை பஞ்சாங்க வேலைப்பாடுகளுடன் அமைந்த நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன.
இராஜ கோபுரத்தின் நடுவில் தெற்கு நோக்கி சண்முகப் பெருமான் (ஆறுமுகசுவாமி) வள்ளி,தெய்வானை சமேதரராய் மயில்மீது அமர்ந்து காட்சி தருகின்றார்.
இராஜ கோபுரத்தின் மறுபக்கத்தில் நடுவில் வடக்கு நோக்கி முத்துக்குமார சுவாமியார் வள்ளி, தெய்வானை சமேதரராய் மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றார்.
கோபுரத்தின் மேற்தளத்தில் கிழக்கு நோக்கி சரஸ்வதியும் மேற்கு நோக்கி மகா லக்சுமியும் வீற்றிருக்கின்றனர்.
கோபுரத்தின் இருமருங்கிலும் கிழக்கேயும் மேற்கேயும் சதுரப் பண்டிகை அமைப்பு காணப்படுகின்றது.
இவற்றை அடுத்து வடகிழக்குத் திசையிலும் தென்மேற்குத் திசையிலும் (இரண்டு) விநாயகப் பெருமான் காட்சி தருகின்றார்.
மேலும் வட மேற்கு திசையிலும் தென்கிழக்குத் திசையிலும் (இரண்டு ) பைரவப் பெருமான் வீற்றிருக்கின்றார்.
இராஜ கோபுரத்தின் முதலாம் தளத்தில் கோடிப் பூதங்கள் மொத்தம் நான்கும், கந்தசுவாமியாரின் இஷ்ட வாகனமான மயில் மொத்தம் எட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இராஜ கோபுரத்தின் முதலாம் தளத்தின் நடுவில் இரு மருங்கும் கஜலக்சுமி காட்சி தருகின்றார்.
கொடுங்கை அமைப்புடனான நான்கு மூலைகளிலும் கோடிப் பூதங்கள் மொத்தம் நான்கு மேலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
வாயிற் தூண்களில் தெற்கு நோக்கி வாயிற் காவலர்களும் வடக்கு நோக்கி காவடி ஏந்திய பக்தர்களும் இருமருங்கிலும் காட்சி தருகின்றனர்.
அலங்காரா நல்லூரா!!!
– முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் –
2025


