டிக்டொக் (TikTok) செயலியில் செய்யவேண்டிய அதிரடி மாற்றங்கள்? ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!
டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு பயனர்களை அடிமையாக்கும் வகையில் உள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) டிஜிட்டல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டொக் (TikTok) செயலி, குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவைச் (China) சேர்ந்த இந்த செயலி, புதிய உள்ளடக்கத்தை பயனர்களுக்கு தொடர்ந்து வழங்கி அவர்களை ஸ்க்ரோல் (Scroll) செய்யத் தூண்டுகிறது. இதனால் பயனர்களின் மூளை “ஆட்டோ பைலட் மோடிற்கு” (Autopilot Mode) செல்கிறது. இது பயனர்களின் சுய கட்டுப்பாட்டை குறைத்து அவர்களை அதன்பால் அடிமையாக்குகிறது என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகள் இரவில் அதிக நேரம் டிக்டொக் (TikTok) பயன்படுத்துவது போன்ற அறிகுறிகளை டிக்டொக் (TikTok) கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, உள்ளடக்கத்தை பயனர்களுக்கு வழங்கும் வடிவமைப்பில் (Algorithm) மாற்றங்களைச் செய்வது உட்பட செயலியின் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய ஐரோப்பிய ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிக்டொக் (TikTok) தனது சேவையின் அடிப்படை வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆணையம் கருதுகிறது. உதாரணமாக, ‘முடிவற்ற திரை நகர்த்தல்’ (Infinite Scroll) போன்ற முக்கிய அம்சங்களை முடக்குவது, இரவில் ‘திரை நேர இடைவேளைகளை’ (Screen Time Breaks) செயல்படுத்துவது மற்றும் செயலியின் அமைப்பை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
டிக்டொக் (TikTok) செயலியின் திரை நேர கட்டுப்பாடு (Screen Time Management) மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு கருவிகள் (Parental Control Tools) போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளங்களில் பயனர்களை ஆன்லைனில் இருக்க ஊக்குவிக்கும் அம்சங்களை அரசியல்வாதிகள் கையாள வேண்டும் என்று ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சாரகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (Digital Services Act – DSA) மீறினால் ஒரு நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் செயலியின் வடிவமைப்பை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம். டிக்டொக் (TikTok) தனது வருவாயை வெளியிடவில்லை. ஆனால் உலக விளம்பர ஆராய்ச்சி மையத்தின் (World Advertising Research Centre) மதிப்பீடுகளின்படி இந்த ஆண்டு 35 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை டிக்டொக் (TikTok) நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து டிக்டொக் (TikTok) செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் எங்கள் தளத்தைப் பற்றி தவறான தகவல்களை கூறுகின்றன. இந்த கண்டுபிடிப்புகளை எதிர்த்து போராட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு எலான் மஸ்க்கின் எக்ஸ் (Elon Musk’s X) நிறுவனம் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (Digital Services Act – DSA) மீறியதற்காக 120 மில்லியன் யூரோ (104 மில்லியன் பவுண்டுகள்) அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தித் தகவல் மூலம் – தி கார்டியன்.
Source – The Guardian.

