400 ரூபா சம்பள உயர்வால் வந்த வினை..?  திகாம்பரம் எச்சரிக்கை

400 ரூபா சம்பள உயர்வால் வந்த வினை..?

திகாம்பரம் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சம்பள உயர்வுக்கு முன்னர் 20 கிலோ கொழுந்தே பறிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

 

பழனி திகாம்பரம் வெளியிட்ட கருத்து:

 

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 400 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கூறியுள்ளது. இம்மாதம் 10 ஆம் திகதிதான் அது கிடைக்கவுள்ளது. ஆனால் சம்பளத்தை அதிகரிக்கச் சொன்னவுடனேயே, இதுவரை 20 கிலோ கொழுந்து பறித்தவர்களிடம் கம்பனிகள் தற்போது 25 கிலோவைக் கொண்டுவருமாறு கேட்கின்றன.

 

தோட்ட முகாமையாளர்கள் தமக்குத் தேவையான வகையில் வேலைகளை நிறுத்துகிறார்கள். இன்று மஸ்கெலியாவில் உள்ள தோட்டமொன்றில் 7 பேரின் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப்பட்டால் அவர்கள் எப்படி வாழ்வது?

 

அதனால் நான் அரசாங்கத்திடம் ஒன்று கூற விரும்புகிறேன், உடனடியாக இந்தக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுங்கள். இல்லாவிடின், எம்முடன் கோபப்பட வேண்டாம்; நாம் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்போம். பணிப்புறக்கணிப்புகளை ஆரம்பிப்போம். எமக்கு வேறு வழியில்லை.

 

நாம் அதிகாரத்தில் இருந்தபோது கம்பனிகள் இவ்வாறு ஆட்டம் போடவில்லை. கம்பனிகளுக்கு நல்ல இலாபம் உள்ளது. அவர்கள் பொய் சொல்கிறார்கள். இலாபம் இல்லையென்றால் கம்பனிகளை ஒப்படைத்துவிட்டுச் செல்லலாமே. அவர்கள் பொய் செய்கிறார்கள். எப்போதும் இலாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.”

Recommended For You

About the Author: admin