தெவ்னி மோரி புனித சின்னங்களின் வழிபாடு ஆரம்பம்..!
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று (5) முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இந்த புனித தாதுக்கள் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்டு ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டு, இந்த வழிபாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இன்று (5) காலை 6 மணிமுதல் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை வழிபடுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்கு இந்த புனித சின்னங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.
நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள தூபியின் அருகே 1960களில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன.
அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம் என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.
இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
அதன்படி, இன்று காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் நேற்று கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

