யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு!
இலங்கைத் தமிழ் அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மாவை சேனாதிராசாவின் (Mavai Senathirajah) திருவுருவச் சிலை இன்று (ஜனவரி 31, சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில், மாவிட்டபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் காணியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். இந்திய துணைத் தூதர்
சாய் முரளி, யாழ் மறைமாவட்ட ஆயர்.
யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ,தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) முன்னாள் தலைவராக இருந்த மாவை சேனாதிராசா, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலம் அகிம்சை வழியில் போராடியவர். அவரது சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது நினைவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாகவும் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.


