அரியாலையில் தீ விபத்தில் சிக்கிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் உள்ளே பரவியதில் படுகாயமடைந்திருந்த வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.
கடந்த 17ஆம் திகதி, குறித்த தாயுடன் வசித்து வந்த அவரது மகள், வீட்டின் அருகே குப்பைகளைக் கூட்டி தீ வைத்து விட்டு தீயைக் கவனிக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டு ம கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தாய் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த தீப்பொறிகள், அங்கிருந்த ஆடைகளிலும், கூரை மரங்களிலும் பற்றி வேகமாகப் பரவியுள்ளதுடன் படுக்கையில் இருந்த தாயின் மீதும் தீ பற்றியுள்ளது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் வசிக்கும் மற்றொரு மகள் ஓடிவந்து அவரைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சுமார் 10 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜனவரி 29, வியாழக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குப்பைகளுக்குத் தீ வைக்கும்போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.

