மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, கரடியனாறு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன் வாங்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இன்று (ஜனவரி 29) காலை புலையவெளி ஆற்றுக்கு மீன் வாங்கச் சென்றபோது, வயல் பகுதியில் நிலமட்டத்தில் இருந்த யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியுள்ளது.
முதலில் தமிழ்ச்செல்வி மின்சாரம் தாக்கி நீரில் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற செல்வம் கர்ணனையும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளனர்.
அயலவர்கள் மின்சாரத்தைத் துண்டித்து இருவரையும் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலங்கள் தற்போது செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கரடியனாறு காவல்துறையினா் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

