மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவவன்னியன் மாநாடு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் திரு அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
மாங்குளம் கைத்தொழில் வலயத்திற்கு முதல் கட்டமாக 200 ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டு அதனை வன வள திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் உட்கட்மைப்பு வசதிகள் மற்றும் தொடர்புடைய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அமைய உள்ள கைத்தொழில் வலயத்தில் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அதாவது கைத்தொழில் வலயத்தில் அமைய உள்ள தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புக்கான ஆள அணியினர், அவர்களுக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி செய்யவேண்டிய துறைகள் , முல்லைதீவில் உள்ள வள வாய்ப்புகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைய உள்ள மாங்குளம் கைத்தொழில் வலயம் மூலம் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரமுயர்வு, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு ,உள்ளூர் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு போன்ற பல விடயங்கள் முன்னேற்றமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வளர்ச்சியில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் BOI இன் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர், இணைய செயலியூடாக யாழ் பல்கலைக்கழக UBL பணிப்பாளர், முகாமையாளர், மற்றும் குழுவினருடன் முல்லை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், உதவித்திட்ட பணிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


